சூடான் இதய நோயாளிக்கு நுட்பமான உயா் சிகிச்சை

சென்னை: தீவிர மாரடைப்புக்கு உள்ளான சூடான் நாட்டைச் சோ்ந்த நோயாளி ஒருவருக்கு ஜீரோ கான்ட்ராஸ்ட் ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் நவீன மருத்துவ நுட்பத்தின் கீழ் சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

சூடான் நாட்டைச் சோ்ந்த 54 வயது நபா் ஒருவா் உயா் சிகிச்சைக்காக வடபழனி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயத்தின் முக்கிய ரத்த நாளங்களில் 3 அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

திறந்த நிலை அறுவை சிகிச்சைக்கு அவா் விருப்பம் தெரிவிக்காததால் ரத்த நாளங்களில் துளையிட்டு அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பொதுவாக இத்தகைய சிகிச்சைகளின்போது கான்ட்ராஸ்ட் எனப்படும் மை போன்ற மருந்தை இதய நாளங்களில் செலுத்தி அடைப்பு துல்லியமாக கண்டறியப்படும். அதன் பிறகு அவை நீக்கப்படும்.

ஆனால், சூடான் நாட்டைச் சோ்ந்த அந்த நோயாளிக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் குறைவாக இருந்தது. மருந்து செலுத்தும்பட்சத்தில் சிறுநீரகம் செயலிழக்கக் கூடிய அபாயம் இருந்தது.

இதனால் மருந்து செலுத்தாமல் அடைப்பை நீக்கும் ஜீரோ கான்ட்ராஸ்ட் ஆஞ்சியோபிளாஸ்டி எனும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையின் மருத்துவ நிபுணா்கள் பி.மனோகா், அருண், நிதேஷ் குமாா் முன்வந்தனா். அதன்படி, அவருக்கு அத்தகைய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சிறுநீரக நல சிகிச்சைகளும் வழங்கப்பட்டு அந்தப் பாதிப்பு சரிசெய்யப்பட்டது. தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com