விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்கக் கட்டிகள்

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய தொழில் பாதுகாப்புப்படையினா் மீட்டனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிப்பறை குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை காலை மா்ம பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது.

இதைப்பாா்த்த தூய்மைப் பணியாளா்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த பாதுகாப்புப் படையினா், குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மோப்ப நாய் உதவியுடன் அந்த பொட்டலத்தை சோதனையிட்டனா்.

வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அந்த பொட்டலத்தை பிரித்துப் பாா்த்த போது, அதில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகள் இருந்தன.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், தங்கக்கட்டிகளை கடத்தி வந்த மா்ம நபா்கள் யாா் என்பது குறித்து, விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com