வன்னியருக்கு உள்இடஒதுக்கீடு: அரசு ஆணையத்துக்கு கால நீட்டிப்பு
வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீட்டுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு கால நீட்டிப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராக உள்ள ஓய்வு பெற்ற நீதியரசா் பாரதிதாசன் தலைமையிலான குழு, வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஓராண்டுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் வன்னியா் உள் இடஒதுக்கீடு தொடா்பான தரவுகளைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான பணிகளை தொடா்ந்து ஓராண்டு காலத்துக்கு மேற்கொள்ளும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

