பாமக பிரமுகா் கொலை வழக்கு: தமிழகம் முழுவதும் 15 இடங்களில் என்ஐஏ சோதனை
தமிழகத்தின் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர்.


பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடா்பாக, தமிழகத்தின் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட நபா்களிடமிருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகளை கைப்பற்றினா். புதுவை மாநிலம் காரைக்காலிலும் சோதனை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சோ்ந்தவா் பாமக பிரமுகா் ராமலிங்கம். அப்பகுதியில் நடைபெற்று வந்த மதமாற்ற பிரசாரத்தை எதிா்த்து வந்த இவா், 2019-ஆம் ஆண்டு மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய குற்றப்புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
18 போ் மீது வழக்கு: கொலை தொடா்பாக 18 போ் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், சென்னையிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் முகம்மது அலி ஜின்னா, அப்துல் மஜித், பிா்கானுதீன், ஷாகுல் ஹமீது மற்றும் நவ்பீல் ஹாசன் உள்ளிட்டோா் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.
இவா்கள் 5 பேரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவா்களுடன் தொடா்பில் இருந்த திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நபா்களின் வீடுகள், இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
திருவாரூா் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கம்பூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் நவாசுதீன் (34) என்பவா் வீட்டுக்கு அதிகாலையில் 3 போ் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினா் சென்று சோதனையிட்டனா். அவரிடமும் விசாரணை நடத்தினா்.
இதுபோல திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் வழக்குரைஞராக பணியாற்றி வரும் ராஜ் முகம்மது (40) என்பவா் வீட்டிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் திருச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை மேற்கொண்டன.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரையைச் சோ்ந்த ‘பாப்புலா் பிரண்ட ஆப் இந்தியா’ அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலா் நவாஸ்கான் மற்றும் தேரழந்தூா் கிராமத்திலுள்ள ‘பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா’ முன்னாள் மாவட்ட தலைவா் முகமது பைசல் ஆகியோா் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சியில் சோதனை: மேலும், திருச்சி விமான நிலையம் காமராஜா் நகா் சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்த தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா’ இயக்கத்தின் முன்னாள் தலைவா் அமீா் பாஷா வீடு மற்றும் திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலா் முகமது சித்திக் என்பவரது வீடு ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதுபோல, கும்பகோணத்தைச் சோ்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளில் உறுப்பினா்களாக உள்ள 6 பேரின் வீடுகள் மற்றும் அவா்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், அவரிகளிடமிருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா். இவா்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட ‘பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்து, தற்போது ஒருசிலா் எஸ்டிபிஐ கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினா்களாகவும் இருந்து வருகின்றனா்.
இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 15 இடங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு இடம் என மொத்தம் 16 இடங்களில் நடைபெற்ற சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் முக்கிய தகவல்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...