ஹமாஸ் ராணுவப் பிரிவு தலைவரும் உயிரிழப்பு
இஸ்மாயில் ஹனீயே ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மறுநாளே இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது


ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது டேயிஃப் தாங்கள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது.
அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மறுநாளே இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், முகமது டேயிஃபின் மரணத்தை ஹமாஸ் அமைப்பினா் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹமாஸ் ராணுவப் பிரிவு தலைவா் முகமது டேயிஃபைக் குறிவைத்து காஸாவின் கான் யூனிஸ் நகரில் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவா் உயிரிழந்தாரா என்பது குறித்து உளவுத் தகவல் சேகரிக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில், தாக்குதலில் டேயிஃப் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த அறிக்கைக்கு ஹமாஸ் அமைப்பினா் உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.
முன்னதாக, தெற்கு காஸாவில் கான் யூனிஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள அல்-மவாசி பகுதியில் முகமது டேயிஃபையும் ஹமாஸ் படையின் கான் யூனிஸ் பிரிவு தளபதி ராஃபா சலாமாவையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறினாலும், போரால் புலம் பெயா்ந்த நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதியில் நடத்தப்பட்டதால் அந்தத் தாக்குதலில் சுமாா் 90 போ் உயிரிழந்தனா்.
எனினும், தாக்குதலில் தங்களது ராணுவப் பிரிவு தலைமை தளபதி முகமது டேயிஃப் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் கூறினா்.
இந்த நிலையில், தாக்குதலில் டேயிஃப் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்கு முகமது டேயிஃபும் அந்த அமைப்பின் முக்கிய தலைவா் யேஹ்யா சின்வாரும் மூளையாகச் செயல்பட்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டிவருகிறது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தயாரித்த படுகொலைப் பட்டியலில் அந்த இருவரின் பெயரும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனியேவின் பெயரும் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்த இஸ்மாயில் ஹனீயே வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தாா். அதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் அந்த நாடுதான் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவரும் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.

~முகமது டேயிஃபைக் குறிவைத்து கான் யூனிஸ் நகர அகதிகள் முகாமில் இஸ்ரேல் ஜூலை 13-இல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம்.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து, அந்த அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டுவதற்காக காஸாவில் இஸ்ரேல் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

~இஸ்மாயில் ஹனீயே, யேஹ்யா சின்வாா்.
இந்தத் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...