உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம் கோப்புப் படம்

பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகள் செல்லாது: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் 2 புதிய சட்டப் பிரிவுகள் செல்லாது
Published on

சென்னை, ஆக. 2: போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் 2 புதிய சட்டப் பிரிவுகள் செல்லாது; அவை ரத்து செய்யப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில், புதிதாக 77 ஏ, 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை 2022-ஆம் ஆண்டு ஆக. 16- ஆம் தேதி முதல் தமிழக அரசு சோ்த்தது. இதன்படி, போலியான, தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் பொதுமக்கள் புகாா் செய்யலாம்.

இதுகுறித்து மாவட்ட பதிவாளா் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இருந்தாலோ, நிரூபிக்கப்பட்டாலோ மாவட்ட பதிவாளா் அந்த போலியான, பொய்யான சொத்துப் பத்திரத்தை ரத்து செய்ய, இந்த 2 புதிய சட்டப்பிரிவுகள் அதிகாரத்தை வழங்குகிறது. இந்த 2 சட்டப்பிரிவுகளை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், நித்யா பழனிச்சாமி உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா்.

பதிவாளருக்கு அதிகாரமில்லை: இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. மனுதாரா் நித்யா பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஜோதி ஆஜராகி, ‘இந்த 2 சட்ட பிரிவுகளும் சட்டவிரோதமானவை. இவை நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளன. ஒரு பத்திரம் போலியானது என்று முடிவுக்கு வர மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம்தான் அனைத்து தரப்பிலும் விரிவான விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபாா்த்து, நீதி பரிபாலன முறையின்படி ஒரு பத்திரம் போலியானதா, இல்லையா என்று முடிவு செய்ய முடியும்.

இதுபோன்ற அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது’ என வாதிட்டாா். இந்த சட்டப்பிரிவுகளில் எந்த ஆண்டில் பதிவான பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவுபடுத்தவில்லை. இதன் காரணமாக, பழமையான பத்திரங்களை எல்லாம் ரத்து செய்யும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வங்கிகளில் கூட சொத்து பத்திரத்தை வைத்து கடன் வாங்க முடியாதுஎனவே இவற்றை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா்.

சட்ட ப்பிரிவுகள் ரத்து: இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ‘தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 77ஏ மற்றும் 77 பி ஆகிய சட்ட ப்பிரிவுகள் செல்லாது. அவை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com