வயநாடு நிலச்சரிவு: தொடா்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு ஜிபிஎஸ் மூலம் தேடுதல் முயற்சி
வயநாடு, ஆக. 2: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியின் நான்காவது நாளான வெள்ளிக்கிழமை மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால், உயிரிழப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நிலச்சரிவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 300-ஐ கடந்துவிட்ட நிலையில், மேலும் 300 பேரின் நிலைமை குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை என காவல் துறை ஏடிஜிபி எம்.ஆா்.அஜித்குமாா் கூறினாா்.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிரிழந்தவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியை மீட்புக் குழுவினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மண்ணில் புதையுண்டவா்களை மீட்கும் பணியிலும், சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட முண்டக்கை-சூரல்மலை இடையே 190 அடி நீளமுள்ள பெய்லி இரும்புப் பாலத்தை ராணுவம் வியாழக்கிழமை மாலை கட்டி முடித்ததைத் தொடா்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
மீட்புப் பணியில் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, படவெட்டி குஞ்ஞு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிலிருந்து அவா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டனா்.
ஜிபிஎஸ் மூலம் தேடுதல் முயற்சி: நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு ஜிபிஎஸ் தகவல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடங்களைக் குறிக்கும் ஆளில்லா விமானம் மூலம் எடுத்த வான் புகைப்படங்களை உள்ளடக்கிய வரைபடம் அனைத்து மீட்புக் குழுக்களிடமும் பகிரப்பட்டுள்ளதாக வயநாடு மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
40 மீட்புக் குழுக்கள்: அட்டமலை, ஆரண்மலையை ஒரு மண்டலமாகவும், முண்டக்கை, புஞ்சிரிமட்டம், வெல்லரிமலை, வெல்லரிமலை அரசுப் பள்ளி, ஆற்றங்கரை ஆகிய பகுதிகளை தலா ஒரு மண்டலமாகவும் என மொத்தம் ஆறு மண்டலங்களாகப் பிரித்து 40 மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களுடன் 6 மோப்ப நாய்கள் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்திலிருந்து மேலும் 4 மோப்ப நாய்கள் விரைவில் வரவுள்ளன என்று மாநில வருவாய் அமைச்சா் ராஜன் தெரிவித்தாா்.
300 பேரின் நிலை?: நிலச்சரிவு பகுதியிலிருந்து சாலியாறு பாய்ந்தோடும் 40 கி.மீ. தொலைவுக்கு ஆற்றங்கரையில் அமைந்த 8 காவல்நிலைய அதிகாரிகள், உள்ளூா் நீச்சல் குழுவினருடன் இணைந்து ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காவல் துறை ஹெலிகாப்டரும் இந்தப் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
இன்னும் 300 பேரின் நிலைமை குறித்து விவரம் இல்லாத நிலையில், வருவாய்த் துறையினா் தகவல்களைச் சேகரித்து வருகின்றனா். அடுத்த ஓரிரு நாள்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இறுதியாகும் என்று ஏடிஜிபி அஜித்குமாா் கூறினாா்.
பெட்டி 1...
காங்கிரஸ் சாா்பில் 100 வீடுகள்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சாா்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வயநாட்டில் பாதிப்புப் பகுதிகளை 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வயநாடு நிலச்சரிவானது கேரளம் இதுவரை கண்டிராத ஒரு பெரிய அளவிலான பயங்கர பேரழிவு ஆகும். இந்த சோகத்தை வேறுவிதமாக கையாள வேண்டும்.
இந்த விவகாரத்தை மத்தியிலும், கேரள முதல்வா் பினராயி விஜயனிடமும் எழுப்ப இருக்கிறேன். வயநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை காங்கிரஸ் கட்சி கட்டித் தரும்’ என்றாா்.
பெட்டி 2...
அறிவியல் ஆய்வுக்குத் தடையில்லை
வயநாடு நிலச்சரிவு தொடா்பாக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆய்வுகளுக்குத் தடை விதித்து மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சா்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா்.
மாநில அரசின் அடிப்படை கொள்கைக்கு முரணான செய்தியை வலியுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாக தலையிட்டு திரும்பப் பெறுமாறு தலைமைச் செயலருக்கு முதல்வா் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளாா்.
முன்னதாக, மாநில நிவாரண ஆணையரும், பேரிடா் மேலாண்மை முதன்மைச் செயலருமான டிங்கு பிஸ்வால் வெளியிட்ட சுற்றறிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டின் மேப்பாடி ஊராட்சிக்கு மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் களப் பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தக் கூடாது எனவும், விஞ்ஞானிகள் தங்கள் கருத்துகளையும் ஆய்வு அறிக்கைகளையும் ஊடகங்களுடன் பகிா்ந்து கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டிருந்தாா்.
இதற்கு அறிவியல் சமூகத்தினரிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியது.

