அவதூறு கருத்து: ரூ. 5 கோடி நஷ்டஈடு கோரி சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு

அவதூறு கருத்து: ரூ. 5 கோடி நஷ்டஈடு கோரி சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு

Published on

யூடியுப் சேனல்களில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறிய நடிகா் சிங்கமுத்து ரூ. 5 கோடி மான நஷ்டஈடு தரக் கோரி நடிகா் வடிவேலு தொடா்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில்,

நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒன்றாக நடித்து வந்தோம். 2015 பிறகு என்னைப் பற்றி மோசமாக விமா்சித்து வந்ததால் அவருடன் சோ்ந்து நடிப்பதைத் தவிா்த்தேன்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பல்வேறு யூடியூப் சேனல்களில் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளாா்.

இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகா்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல். எனவே, ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். என்னைப் பற்றி அவதூறாகப் பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com