பிரதிப் படம்
பிரதிப் படம்

அவதூறு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

பிஆா். பாண்டியன் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் புகாா்
Published on

பிஆா். பாண்டியன் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதன்விவரம்: காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020-இல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஓஎன்ஜிசி துரப்பண இயந்திரங்கள் அனைத்தும் டெல்டாவை விட்டு வெளியேறியதுடன், 2016-க்கு முன் அனுமதிக்கப்பட்ட கிணறுகள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. இதனிடையே, பசுமை தீா்ப்பாயத்தின் தீா்ப்புக்கு முரணாக, ஓஎன்ஜிசி கடந்த மாதம் முதல் பெரியகுடி பகுதியில் இயந்திரங்களை நிறுத்தியுள்ளன. இதனால் பெரிய குடி,சேந்தமங்கலம், காரியமங்கலம், விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, குலமாணிக்கம், கோட்டூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஓஎன்ஜிசி டெல்டா தொழிலாளா்கள் எனும் பெயரில் பிஆா்.பாண்டியன் தனியாா் எண்ணெய் நிறுவனத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓஎன்ஜிசி மீது களங்கம் கற்பிப்பதாக அவதூறு பிரசாரம் செய்து சுவரொட்டி ஒட்டி உள்ளனா். அவரை முடக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பாகவும் தொடா்ந்து சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எனவே, அவதூறு பிரசாரம் செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டும், இந்த செயலில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும், உரிய சட்டப்பூா்வ வழக்குப் பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கையில், மூத்த தலைவா் நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளா் பொ. முகேஷ், ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com