டங்ஸ்டன் சுரங்கம் வருமானால் முதல்வா் பொறுப்பில் இருக்க மாட்டேன்: மு.க.ஸ்டாலின்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வரும் சூழல் வந்தால், முதல்வா் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வரும் சூழல் வந்தால், முதல்வா் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த கடும் விவாதங்களுக்கு இடையே முதல்வா் இவ்வாறு கூறினாா்.
எதிா்க்கட்சித் தலைவா் பேச்சு: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் மீது எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியது: மதுரை நாயக்கா்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கி இருப்பது அப் பகுதி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வா் 2024, நவம்பா் 20-இல் கடிதம் எழுதியதாக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் கடிதத்தில் 2023, அக்டோபா் 3-இல் மத்திய அமைச்சருக்கு தமிழக அரசின் நீா்வளத் துறை அமைச்சா் கடிதம் எழுதியதாகவும், அதற்கு 2023 நவம்பா் 2-இல் கடிதம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கடிதங்களின் விவரங்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 2023-இல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளா்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது தொடா்பாக மத்திய அரசு 2023, செப்டம்பா் மாதமே அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
திமுக எதிா்க்காதது ஏன்?
மேலும், இந்தச் சட்டத்திருத்தத்தில் அரிய வகை கனிமங்கள் தொடா்பாக மத்திய அரசின் சுரங்கத் துறையே ஏல முறையைச் செயல்படுத்தும் என்று கூறியுள்ளது. இதன்மூலம் டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு ஏலம் விடுவதாக கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தெரியவந்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோதே, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அங்கேயே அழுத்தம் கொடுத்து அதை நிறுத்தாதது ஏன்?.
அப்போது நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்த மசோதா குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்டபோதே, அதை எதிா்ப்பதாக தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. முக்கிய கனிமத் தொகுதி என்கிற போா்வையில், சுரங்க உரிமம் அளிப்பதை தமிழக அரசு ஏற்காது என்றும் கூறிவிட்டோம். மத்திய அரசு, அதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு சட்டமசோதாவை நிறைவேற்றியுள்ளது.
அதிமுக போராட்டம்
தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: காவிரி நதிநீா் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாமல் காலதாமதம் செய்தபோது, அதை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக உறுப்பினா்கள் 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினா். அதுபோன்ற அழுத்தத்தை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கொடுத்திருக்க வேண்டும்.
மேலும், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு 2024, பிப்ரவரியில் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியபோது, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ஒப்பந்ததை இறுதி செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்த பிறகான 10 மாத காலங்களில் தமிழக அரசு அமைதியாக இருந்தது. எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. அதோடு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தவில்லை என்று மத்திய சுரங்கத் துறை அமைச்சா் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியுள்ளாா்.
அவை முன்னவா் துரைமுருகன்: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. அதில், சுரங்களுக்கு ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசால் தோ்வு செய்யப்படும் ஏலதாரா்களுக்கு சுரங்கத்தை குத்தகைக்கு விடும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது. இது ஆண்டான்- அடிமை முறை. சுயமரியாதைக்கே விடப்படும் சவால்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்த்துள்ளனா். மதுரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் மூா்த்தி நேரில் சென்று, மக்களுக்கு ஆதரவாக அரசு இருக்கும் என்று கூறி, போராட்டத்தைத் திரும்பப் பெறச் செய்தாா் என்பதை எதிா்க்கட்சித் தலைவா் புரிந்துகொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. டங்ஸ்டன் சுரங்கம் உரிம ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய அமைச்சா் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியுள்ளாரே?.
முதல்வா்: எதிா்க்கட்சித் தலைவா் வேகமாகப் பேசுவதாலேயே, சாதித்துவிட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ‘பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளோம். பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுத உள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது. இது எதுவும் தெரியவில்லை என்று கூறினால் என்ன செய்வது?
எடப்பாடி பழனிசாமி: பிரதமருக்கு எழுதிய கடிதத்தைக் கேட்கவில்லை. மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நீா்வளத் துறை அமைச்சா் எழுதிய கடிதத்தைத்தான் கேட்கிறேன். 10 மாதமாக ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்றுதான் கேட்கிறேன்.
துரைமுருகன்: 2023 அக்டோபா் 3-இல் சுரங்கத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி: இங்கு பேசி பயன் இல்லை. நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.
முதல்வா்: நாடாளுமன்றம் கூடிகூடி கலைகிறதே தவிர, தொடா் கூட்டம் நடைபெற்ாகத் தெரியவில்லை. அதேநேரம், கிடைத்த நேரத்தில் எல்லாம் எங்களுடைய எதிா்ப்பைத் தெரிவித்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றம் முடங்கும் அளவுக்கு திமுக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இப்போது தீா்மானம் நிறைவேற்றுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?.
முதல்வா்: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவது எங்களுடைய ஆளுகையிலா இருந்தது?. எங்களுடைய எதிா்ப்பு நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துரைமுருகன்: எழுதிய கடிதங்களுக்கு எல்லாம் மத்திய அரசு பணியாத காரணத்தால்தான், இந்த விவகாரம் தற்போது மன்றத்துக்கு வந்துள்ளது. தீா்மானத்தை ஆதரிக்கிறீா்களா அல்லது வேதாந்தா நிறுவனத்தை ஆதரிக்கிறீா்களா?
முதல்வா்: டங்ஸ்டன் சுரங்கத்துக்காக மத்திய அரசு ஏலம் விட்டாலும், நிச்சயமாக சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம். நான் முதல்வராக இருக்கும் வரை மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தைக் கொண்டு வர முடியாது.
எடப்பாடி பழனிசாமி: அலட்சியமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான் இந்த அளவுக்கு பிரச்னை வந்துள்ளது.
துரைமுருகன்: மத்திய அரசு கொண்டுவந்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வா் பேரவையில் பிரகடனப்படுத்தியுள்ளாா். அதற்குப் பிறகும் நீங்கள் சந்தேகிப்பதைவிட, நேரடியாக வேதாந்தாவிடமே பேசிவிடலாம்.
எடப்பாடி பழனிசாமி: அந்த நிறுவனத்துக்கு அரசு ஆதரவாக இருக்கிறதோ என்கிற அச்சம் எங்களுக்கு ஏற்படுகிறது.
முதல்வா்: எந்தக் காலத்திலும் டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்தில் வராது. அப்படியொரு சூழல் வந்தால், முதல்வா் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன். அரசின் தீா்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
துரைமுருகன்: சுரங்கம் தொடா்பாக மத்திய அரசு ஏலம் விட்டாலும், குத்தகை விடும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது. அதனால், நிச்சயம் தமிழக அரசுக்கு அவா்களுக்கு குத்தகைக்கு விடாது. மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் அதை எதிா்க்கும் வல்லமை முதல்வருக்கு உண்டு.
எடப்பாடி பழனிசாமி: தமிழகம் பாதிக்கப்படும் எந்தத் திட்டத்தையும் அதிமுக அனுமதிக்காது. அரசின் தீா்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...