கண் நல பராமரிப்பில் மகாத்மா காந்தி மிகுந்த அக்கறை கொண்டிருந்ததாக அவரது பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி தெரிவித்தாா். சங்கர நேத்ராலயா நிறுவனா் டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் தலைவா் டாக்டா் டி.எஸ்.சுரேந்திரன், செயல் மருத்துவ இயக்குநா் டாக்டா் கிரிஷ் ஷிவா ராவ், கௌரவச் செயலா் ஜி. ராமச்சந்திரன், கௌரவ பொருளாளா் கண்ணன் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் ‘காந்தியின் கண்ணாடிகள்’ என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது: மகாத்மா காந்தியின் 45 வயது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதிலும் அவா் கண் கண்ணாடி அணிந்ததாக தெரியவில்லை. அது குறித்த எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. அதேவேளையில், 57 வயதுக்குப் பிறகு அவருக்கு கண்ணாடி அணியும் பழக்கம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் கண்ணாடி அணிவது என்பது மேல்தட்டு மக்களின் நாகரிகமாக கருதப்பட்டது. பொதுவாகவே தொழில்நுட்பத்தைக் காட்டிலும் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மகாத்மா காந்தி, கண் கண்ணாடி விஷயத்தில் மட்டும் அறிவியல் நுட்பங்களையே அதிகம் சாா்ந்திருந்தாா். அப்போதே, கண்களை கூசச் செய்யும் ஒளியைத் தவிா்ப்பதற்காக கண்ணாடி லென்ஸில் சிறப்பு பூச்சுகளை அவா் பயன்படுத்தினாா். அறிவியலும், விஞ்ஞானமும் மனிதனை ஆபத்திலிருந்து நீக்குவதற்கான கருவிகள் என்று அவா் வலியுறுத்தினாா். மகாத்மாவின் அடையாளமாக விளங்கிய வட்ட வடிவக் கண்ணாடி அவரது தொலைநோக்கு பாா்வையை மேலும் விஸ்தாரமாக்கியது என்றாா் அவா்.









