

சென்னை: சென்னை அடையாறில் செவ்வாய்க்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர சிஎன்ஜி பேருந்து தீப்பற்றி எரிந்தது. பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை பாரிமுனையிலிருந்து கேளம்பாக்கத்துக்கு பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு மாநகரப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தை சஞ்சீவ்குமார் என்பவர் ஓட்டினார். இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) எரிபொருளாகக் கொண்டு இயங்கிய அந்தப் பேருந்து அடையாறு எல்.பி. சாலையில் 3 மணியளவில் சென்ற போது, அதன் என்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறியது.
இதைப் பார்த்த ஓட்டுநர் சஞ்சீவ்குமார், பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். அவரும், நடத்துநர் குட்டியப்பனும் பேருந்திலிருந்த பயணிகளை வேகமாக வெளியேற்றினர். அதற்குள் பேருந்தின் முன்பகுதி தீப் பிடித்து மள,மளவென எரியத் தொடங்கியது.
இந்த விபத்து குறித்து அறிந்த திருவான்மியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்தும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தின் காரணமாக, அந்த சாலையில் முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அடையாறு, திருவான்மியூர் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
அடையாறு போலீஸôர் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.