கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்


சென்னை, ஜூலை 9: கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை, அரசு, தனியாா் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க 2023 டிசம்பா் 30-ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு, விமான நிலையம் - கிளாம்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாகக் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குச் செல்ல மேம்பால நடைபாதை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூா் மாா்க்கம் செல்லும் வாகனங்களுக்கு ‘யு வளைவு பாலம்’ அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியாா் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை வெளிவட்ட சாலை வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கில் அரசுத் தரப்பையும் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன்பு வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...