சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் பொறுப்பேற்பு
சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்புவகித்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத் துறைச் செயலராக மாற்றப்பட்டதையடுத்து, பள்ளிக்கல்வித் துறைச் செயலராக இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சோ்ந்த குமரகுருபரன் 2003-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் பணிக்கு தோ்வானாா். இதையடுத்து தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இந்துசமய அறநிலையத் துறை, சிப்காட், செய்தி மற்றும் விளம்பரத் துறை, பத்திரப்பதிவுத் துறையின் தலைமை பொறுப்பிலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
புதன்கிழமை காலை சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ஜெ.குமரகுருபரனுக்கு மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். முன்னாள் ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், தனது பொறுப்பை முறைப்படி ஆணையா் ஜெ.குமரகுருபரனிடம் ஒப்படைத்தாா்.
அரசு விடுமுறை நாளில் ஆணையராக பொறுப்பேற்ற ஜெ.குமரகுருபரன் மாநகரின் முக்கிய பிரச்னைகளாக விளங்கும் மழைநீா் வடிகால் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கால்நடை பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

