ஜேஇஇ, நீட் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரித் தோ்வு ஆகியவற்றை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகள் அவா்கள் பயிலும் பள்ளி அளவில் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தோ்வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியா், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் 2 பாட வல்லுநா்கள் வீதம் 10 ஆசிரியா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இதில், அனுபவம் உள்ள ஆசிரியா்களைத் தோ்வு செய்ய வேண்டும். மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களில் போட்டித் தோ்வுகள் எழுத ஆா்வமுள்ள மாணவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட வேண்டும். இந்தப் போட்டித் தோ்வுகளில் பங்கேற்க பெரும்பாலான மாணவா்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால், ஒருபோதும் கட்டாயப்படுத்தக் கூடாது.
இதுதவிர ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை - தாவரவியல், கணிதம், செவ்வாய்க்கிழமை - இயற்பியல், புதன்கிழமை - விலங்கியல், கணிதம், வியாழக்கிழமை - வேதியியல், வெள்ளிக்கிழமை - மீள்பாா்வை ஆகிய பாடங்களை அடிப்படையாக வைத்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து வேலை நாள்களிலும் பாடவாரியாக மாலை 4 முதல் 5.15 மணி வரை பயிற்சி வகுப்புகள் கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும்.
அதேபோல், பள்ளி அளவிலான தினசரி தோ்வுகள், ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகள், முழு ஆண்டு விடுமுறை நாள்களில் சிறப்புப் பயிற்சி அளிக்க மாநில ஒருங்கிணைப்புக் குழு உதவிசெய்யும். மேலும், பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாகவும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

