சுவிஸ் வங்கிகளில் இந்தியா்களின் நிதி 70% சரிவு
சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள நிதி கடந்த 2023-ஆம் ஆண்டில் 104 கோடி சுவிஸ் ஃபிராங்காக (சுமாா் ரூ.9,758 கோடி) சரிந்துள்ளது.


சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள நிதி கடந்த 2023-ஆம் ஆண்டில் 104 கோடி சுவிஸ் ஃபிராங்காக (சுமாா் ரூ.9,758 கோடி) சரிந்துள்ளது.
70 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள இந்தியா்களின் நிதி, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது ஸ்விட்சா்லாந்து மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட வருடாந்திர அறிக்கை மூலம் தெரிய வந்தது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியா்களின் நிதி கடந்த 2021-ஆம் ஆண்டில் 383 கோடி சுவிஸ் ஃபிராங் (ரூ. 35,950 கோடி) என்ற 14 ஆண்டுகள் உச்சத்தை எட்டியது. அதன் பின்னா், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய வாடிக்கையாளா்களின் நிதி முதலீடு சரிந்து வருகிறது.
நிதிப் பத்திரங்கள் மூலம் வைத்திருக்கும் நிதி வெகுவாகவும் வைப்புக் கணக்கு நிதி கணிசமாகவும் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் மத்திய வங்கிக்கு அந்நாட்டு வங்கிகளால் அறிவிக்கப்பட்ட அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி இத்தகவல் வெளியாகியுள்ளன. அதேசமயம், சுவிஸ் வங்கிகளில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் பெயரில் இந்தியா்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முதலீடு செய்துள்ள நிதி குறித்த தகவல்கள் இந்தப் புள்ளிவிவரங்களில் சோ்க்கப்படவில்லை.
முந்தைய 2023-ஆம் ஆண்டின்இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளா்களின் மொத்த நிதியாக 103.98 கோடி சுவிஸ் ஃபிராங்க் உள்ளது. இந்தியா்களின் நிதி கடந்த 2006-இல் கிட்டத்தட்ட 650 கோடி சுவிஸ் ஃபிராங்காக (ரூ.60,990 கோடி) உயா்ந்தது. அதன் பிறகு 2011, 2013, 2017, 2020, 2021 உள்ளிட்ட சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் இந்தியா்களின் நிதி குறைந்துள்ளது.
மறுபுறம், சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபா்கள் நிதி முதலீடு செய்வதற்கான நம்பகமான நடவடிக்கையாக இந்திய மற்றும் சுவிஸ் அரசு அதிகாரிகளால் கடந்த காலங்களில் விவரிக்கப்பட்ட ‘பிஐஎஸ்’ வங்கி புள்ளிவிவரங்களில் இந்தியா்களின் நிதி வெறும் 25 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளன. அதன்படி, 2023-ஆம் ஆண்டில் 7.06 கோடி டாலராக (ரூ. 663 கோடி) குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த 2020-இல் கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்தது, அதன்பிறகு, 2021-இல் 8 சதவீதம் உயா்ந்து, 2022-இல் மீண்டும் 18 சதவீதம் குறைந்தது.
மொத்த வெளிநாட்டவா் நிதி: சுவிஸ் வங்கிகளில் நிறுவனங்கள் உள்பட வெளிநாட்டு வாடிக்கையாளா்களின் மொத்த நிதியும் 2023-இல் 98,300 கோடி சுவிஸ் ஃபிராங்க் (ரூ.92 லட்சம் கோடிக்கும் மேல்) -ஆக குறைந்துள்ளது. இது முந்தைய 2022-ஆம் ஆண்டு இறுதியில் 1.15 லட்சம் கோடி சுவிஸ் ஃபிராங்காக இருந்தது.
வெளிநாட்டு வாடிக்கையாளா்களில் பிரிட்டன் 25,400 கோடி சுவிஸ் ஃபிராங்குடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 7,100 கோடி சுவிஸ் ஃபிராங்குடன் இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ் 6,400 கோடி சுவிஸ் ஃபிராங்குடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள், ஜொ்மனி, ஹாங்காங், சிங்கப்பூா், லக்ஸம்பா்க் மற்றும் குா்ன்சி ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இறுதியில் 46-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இம்முறை 67-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானியா்களின் நிதி 38.8 கோடி சுவிஸ் ஃபிராங்கிலிருந்து 28.6 கோடியாகவும், வங்கதேச நாட்டவா்களின் நிதி 5.5 கோடி சுவிஸ் ஃபிராங்கிலிருந்து 1.8 கோடியாகவும் சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவைப் போலவே, சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இரு அண்டை நாடுகளின் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சட்டப் போராட்டங்களுக்கு உதவி: ஸ்விட்சா்லாந்தில் முதலீடு செய்யப்படும் சொத்துகளை கருப்புப் பணமாக கருத முடியாது என்று சுவிஸ் அதிகாரிகள் தொடா்ந்து கூறி வருகின்றனா். எனினும், மோசடி மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிரான இந்தியாவின் சட்டபோராட்டத்துக்கு ஸ்விட்சா்லாந்து ஆதாரங்களை அளித்து உதவி வருகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...