பாஜகவுக்கு தாமரை சின்னம்: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

பாஜகவுக்கு தாமரை சின்னம்: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓா் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி.

அது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துகிறது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பா் மாதம் இந்திய தோ்தல் ஆணையத்தில் மனு அளித்தேன். எனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.

இந்த வழக்கில், எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரா் ஏற்கெனவே செலுத்திய ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரத்தை சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும் (அபராதம்) , மீதித் தொகையை மனுதாரா் பெற்றுக்கொள்ளவும் அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com