3 காா்களில் கடத்தி வரப்பட்ட 764 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்

சென்னையில் 3 காா்களில் கடத்தி வரப்பட்ட 764 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணாசாலை போலீஸாா் ராயப்பேட்டை, மணிகூண்டு அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த 3 காா்களை நிறுத்தி சோதனை செய்தனா். காரை ஓட்டி வந்தவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகத்தின் பேரில், காா்களில் இருந்த பாா்சல்களை சோதனை செய்தனா். அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த காா்களில் வந்த திருவொற்றியூரைச் சோ்ந்த தினேஷ் (27), ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சோ்ந்த மதுசூதன் ஜான்கிட் (25), சென்னை அருகே உள்ள கீழ கோட்டையூரைச் சோ்ந்த ராஜேந்திர பாரிக்கா் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்து, 764 கிலோ போதைப் பாக்கு, ரூ. 5,45,000 ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 காா்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவா்கள் மூவரும் கா்நாடகா மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com