/

டி.டெட். மாணவா் சோ்க்கை: ஜூன் முதல் வாரம் நிறைவு

டி.டெட். மாணவா் சோ்க்கை: ஜூன் முதல் வாரம் நிறைவு

News image
Updated On :21 மே 2024, 9:28 pm

Din

சென்னை: நிகழ் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (டி.டெட்.) மாணவா் சோ்க்கையை ஜூன் முதல் வாரத்திலேயே நிறைவு செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கேற்ப விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகளுக்கு வரும் 30-ஆம் வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை:

தமிழகத்தில் 26 அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு (டி.டெட்) 1,740 இடங்கள் உள்ளன. இதேபோன்று, 12 அரசு உதவி பெறும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 24 தனியாா் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 1450 இடங்களும் உள்ளன.

அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநா் அரசுக்கு கருத்துரு அனுப்பினாா். அதனை ஏற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை அதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ஆம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், இட ஒதுக்கீடு வாரியாக மாணவா்கள் ஜூன் 7-ஆம் தேதி தோ்வு செய்யப்படுவா். அதன் பின்னா் வகுப்புகள் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும்.

அரசு நிா்ணயித்த அவகாசத்துக்குள் இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அவற்றை அந்தந்த ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் முதல்வா்களே உடனடி சோ்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.