தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், "டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்" என்ற பெயரில் "யூடியூப்' சேனலை தொடங்கி, இந்திய தேர்தல் நடைமுறைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய கிலாபத் சிந்தாந்தம் பற்றியும் பல்வேறு விடியோ பதிவுகள் வெளியிட்டார். மேலும், அதில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் "ஹிஷாப் உத் தகீர்' என்ற அமைப்புக்கு ஆதரவாக ஹமீது உசேன் பேசும் "விடியோ'களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இது குறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், ஹமீது உசேன், ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில் ஒரு கல்வி அறக்கட்டளையை நடத்தியதும், அந்த அறக்கட்டளை அலுவலகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ரகசிய கூட்டங்களை நடத்தி கிலாபத் சிந்தாத்தம் குறித்து உரை நிகழ்த்தியதும், கூட்டத்தில் பங்கேற்கும் முஸ்லிம் இளைஞர்களை ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரும் மூளைச்சலவை செய்து அவர்களை "ஹிஷாப் உத் தகீர்' அமைப்பின் உறுப்பினர்களாகச் சேர்த்து வந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக 3 பேரையும் போலீஸôர் கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தாம்பரம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த முகம்மது மௌரைஸ், காதர் நவாஷ் செரீப் என்ற ஜாவித், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அகமது அலி ஆகியோரை கைது செய்தனர்.

கரூர், கன்னியாகுமரி: இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள், மடிக்கணினிகள், கணினி ஆகியவற்றை சைபர் குற்றப்பிரிவினர் ஆய்வு செய்தனர். இதில், ஹமீது உசேன் தரப்பினர் கரூர், கன்னியாகுமரியிலும் ரகசிய கூட்டங்களை நடத்தி, பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்தக் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் யார், அவர்கள் யாரேனும் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்ந்தள்ளனரா என விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பாக அங்கு சென்று விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

அதேவேளையில் ஹமீது உசேன், யூ-டியூப் சேனலை முடக்கும் நடவடிக்கையிலும் சைபர் குற்றப்பிரிவு எடுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கு செயல்பட்டதாக உபா சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com