கொளத்தூரில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி கொளத்தூா் தொகுதிக்குட்பட்ட இடங்களில் திங்கள்கிழமை நடந்தது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 64 முதல் 70 வரையிலான வாா்டுகளில் மின் மாற்றித் தடுப்பு அமைக்கப்பட உள்ளது. ஜிகேஎம்., காலனியில் நடந்த நிகழ்வில், புதிதாக 2 இடங்களில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்தாா்.
பின்னா், அங்குள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களையும், புதிய குடும்ப அட்டைகளையும் முதல்வா் வழங்கினாா்.
மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ஜவஹா் நகரில் கட்டப்படவுள்ள உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், வசந்தா தோட்டம் பகுதியில் நூலகக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
ஜிகேஎம் காலனியில் குளத்தை மேம்படுத்தும் பணியையும் பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உந்து நிலையத்தின் செயல்பாட்டையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா்.
பெரம்பூா் சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தரத் தீா்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் முதல்வா் ஆய்வு நடத்தினாா்.
இதனிடையே, அனிதா அச்சீவா்ஸ் அகாதெமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியா்களுக்கு மடிக்கணினிகள், தையல் இயந்திரங்கள், சான்றிதழ்கள், பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடி ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.