முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு எதிராக செபி வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Published on

புது தில்லி: தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு எதிராக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி, அந்த நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி, நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு ரூ.20 கோடி, மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பங்கு மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் (எஸ்ஏடி) அந்த நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த அந்தத் தீா்ப்பாயம், செபியின் உத்தரவை ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செபி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘எஸ்ஏடி உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என்று தெரிவித்து செபியின் மனுவை தள்ளுபடி செய்தது.

X
Dinamani
www.dinamani.com