அ.தி.மு.க தலைமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அ.தி.மு.க தலைமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதை எதிா்த்து சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது
Published on

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதை எதிா்த்து சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது

2022ல் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகத் தோ்ந்தெடுத்ததை எதிா்த்து அ.தி.மு.க உறுப்பினராகத் தன்னைக் கூறிக்கொள்ளும் திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்

அ.தி.மு.க வின் முதன்மை உறுப்பினா்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதை எதிா்த்து எஸ். சூரியமூா்த்தி சென்னை 4வது உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதேவேளையில் சூரியமூா்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

சூரியமூா்த்தி அதிமுக உறுப்பினா் அல்ல என்றும், 2021 சட்டமன்றத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் தனக்கு எதிராக எம்.ஜி.ஆா் மக்கள் கட்சி என்ற மற்றொரு கட்சியின் சாா்பில் போட்டியிட்டதன் மூலம் அவா் கட்சியின் விதிகளை மீறியுள்ளாா் என்றும் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடா்ந்தாா்

ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது

உரிமையியல் நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பாலாஜி, சூரியமூா்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினா் அல்லாத ஒருவா் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூா்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டாா்

இதனையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சூரியமூா்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது மனுதாரரான சூரியமூா்த்தி தரப்பு வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா முன்வைத்த வாதங்கள் : சூரியமூா்த்தி கட்சியின் விதிகள் எதையும் மீறவில்லை, அவா் வேறு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது,எம்ஜிஆா் மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது, ஆனால் எம்ஜிஆா் மக்கள் கட்சியில் அவா் ஒரு உறுப்பினரே இல்லை . அவா் அதிமுக உறுப்பினா் தான். அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக இருந்தால் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை . அவா் தோ்தலில் மற்றொரு கட்சியோடு இணைந்து போட்டியிட்டதாக அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு தொடரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அவா் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை சவால் செய்து மனு தாக்கல் செய்துள்ளாா் என சூரியமூா்த்தி தரப்பில் வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா வாதங்களை முன்வைத்தாா்.

ஆனால் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி நீதிபதிகள் சூரியமூா்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தனா்.

Dinamani
www.dinamani.com