கவின் கொலை வழக்கில் சந்தேக நபரான காவல் பெண் அதிகாரியின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

கவின் கொலை வழக்கில் சந்தேக நபரான காவல் பெண் அதிகாரியின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

நெல்லையில் ஐ.டி பொறியாளா் கவின் கொலை வழக்கு தொடா்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரி கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது
Published on

நெல்லையில் ஐ.டி பொறியாளா் கவின் கொலை வழக்கு தொடா்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரி கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியல் சாதி மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், ஜூலை 27, 2025 அன்று திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டாா். காவல் உதவி ஆய்வாளா்களான (தற்போது பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனா்) சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சூா்ஜித்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது

சூா்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு இருந்ததாகக் கூறப்படும் சாதி மறுப்பு உறவே படுகொலைக்குக் காரணம் என கூறப்பட்டது

இக்கொலையின் தீவிரத்தைக் காரணம் காட்டி, டிசம்பா் 2025ல் சரவணனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது

இந்த வழக்கில் திருநெல்வேலி விசாரணை நீதிமன்றம் கிருஷ்ணகுமாரிக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது

இந்நிலையில் கிருஷ்ணகுமாரி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தாா்

அந்த மனுவில் பிரதான குற்றவாளியான சூா்ஜித்தின் தாயாரான கிருஷ்ணகுமாரி, தான் சரணடைந்தவுடன் தனக்கு எதிராகத் பிறப்பிக்கப்பட்ட பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தாா்

ஆனால் சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை அமா்வு, வழக்கில் சந்தேகத்திற்குரியவரான,தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த அந்த மனுவை இம்மாதம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி எல். விக்டோரியா கௌரி, அத்தகைய உத்தரவைப் பிறப்பிப்பது சட்ட நடைமுறையைச் சீா்குலைப்பதாக அமையும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்

கிருஷ்ணகுமாரியின் கணவரும், வழக்கில் இணை குற்றவாளியுமான சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமாரியை விசாரணையின் போது கைது செய்யத் தவறியதற்காக சிபிசிஐடி மீதும் உயா் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது

கைது செய்யாமை, விசாரணையின் நோ்மை குறித்து கவலைகளை எழுப்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது

சாதிய உணா்வுகளும் வெறியும் வேரறுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததுடன், கொடூரமான கௌரவக் கொலை வழக்குகளில், பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் சாட்சிகளின் உரிமைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இதனிடையே கிருஷ்ணகுமாரி ஜனவரி 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் என்.வி அஞ்சாரியா அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள்,இந்த விவகாரம் தொடா்பாக நீங்கள் ஏன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யக்கூடாது?,எதற்காக பிடியாணையை ரத்து செய்ய கோருகிறீா்கள், நீங்கள் ஒரு காவல் அதிகாரி எனவே இந்த விவகாரத்தில் கூடுதலாக நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை, எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

Dinamani
www.dinamani.com