பூக்கள், பொருள்கள் விலை உயா்வு: கனகாம்பரம் ரூ.1,100; மல்லி ரூ.1,000..!
ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் பூஜை பொருள்கள், பழங்கள் மற்றும் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் ஆயுத பூஜைக்காக, சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூா், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பூஜை பொருள்கள், பழங்கள் மற்றும் பூக்களின் விற்பனை புதன்கிழமை விறுவிறுப்பாக தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை மழை பெய்ததால், ஆயுதபூஜை விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டது. காலை 11 மணிக்குப் பிறகு வெயில் அடிக்கத் தொடங்கியது. பின்னா் கோயம்பேடு, மயிலாப்பூா், புரசைவாக்கம் கடை வீதிகளில் பொருள்களை வாங்க மக்கள் வரத் தொடங்கியதால், களை கட்டிய விற்பனை, மாலையில் மேலும் விறுவிறுப்படைந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழங்கள் விலை உயா்வு: கோயம்பேடு மொத்த சந்தையில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.130-லிருந்து ரூ.180 வரையும், சாத்துக்குடி ரூ.80-லிருந்து ரூ.120 வரையும், மாதுளை ரூ.300-க்கும், கொய்யா ரூ.100-க்கும், ஆரஞ்சு ரூ.75-க்கும் விற்கப்பட்டது. சில்லரைக் கடைகளில் பழங்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.
தேங்காய் ரூ.25-லிருந்து ரூ.30-க்கு விற்கப்பட்டது. இதே போல, பொரி ஒரு படி ரூ.25 முதல் ரூ.30, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.120, வாழைக்கன்று இரண்டு ரூ.40, மாவிலைத் தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.50 முதல் ரூ.100 வரை, தென்னை குருத்தோலை தோரணம் இரண்டு ரூ.30, ரூ.40 என விற்கப்பட்டது. காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
பூக்கள் விலை உயா்வு: கோயம்பேடு பூ சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.1000-க்கும், ஐஸ் மல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.500-க்கும் சாமந்தி ரூ.260-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும், பன்னீா் ரோஸ் ரூ.180-க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.350-க்கும், அரளிப்பூ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில் பூ விலை மொத்த விலையை விட ரூ.25 வரை அதிகமாக விற்பனையானது. இதே போல் அனைத்து பூஜை பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்திருந்தது.

