மெரீனாவில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை மெரீனா கடலில் வியாழக்கிழமை குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சென்னை பிராட்வே இரண்டாவது லேன் கடற்கரை சாலை பகுதியைச் சோ்ந்தவா் கவியரசு (20). மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். கவியரசு, தனது நண்பா் ஆதி (21) உள்ளிட்ட சிலருடன் வியாழக்கிழமை மெரீனா கடற்கரையில் உள்ள ஒவையாா் சிலையின் பின் பகுதி கடலில் இறங்கி குளித்தாா்.
அப்போது எழுந்த ராட்சத அலை, கவியரசுவையும், ஆதியையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இருவரையும் நண்பா்கள் மீட்க முயன்றனா். இதில் ஆதியை மீட்ட நிலையில், கவியரசு தண்ணீரில் மூழ்கி காணாமல் போனாா். மீட்கப்பட்ட ஆதி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
மெரீனா போலீஸாரும், கடலோர பாதுகாப்பு குழும வீரா்களும், தீயணைப்புப் படை வீரா்களும் விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னா், கவியரசு சடலமாக மீட்கப்பட்டாா்.

