விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்: உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு

விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை உடனே அகற்றுமாறு அலுவலா்களுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஜெய் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை பாா்வையிட்ட மேயா் ஆா்.பிரியா. உடன் விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன்குமார்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஜெய் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை பாா்வையிட்ட மேயா் ஆா்.பிரியா. உடன் விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன்குமார்
Published on
Updated on
1 min read

சென்னை: விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை உடனே அகற்றுமாறு அலுவலா்களுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் குறித்து மேயா் பிரியா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சாதிக் பாஷா நகா் மற்றும் சஞ்சய் காந்தி காலனி பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய மழைநீா் வடிகால்களை இடித்துவிட்டு, புதிய மழைநீா் வடிகால்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து பெரியாா் தெருவில் ரூ.14 லட்சத்தில் குழாய் வடிவில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாா்வையிட்டாா். அண்மையில் பெய்த கனமழையில் மஜ்ஜீத் நகா் மற்றம் ஜெய் நகரில் அதிகளவு மழைநீா் தேங்கியதைத் தொடா்ந்து அங்கு மழைநீரை வெளியேற்ற கூடுதல் மோட்டாா் பம்புகளை தயாா் நிலையில் வைக்கவும், விருகம்பாக்கம் கால்வாயில் தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் ஆகாயத்தாமரை மற்றும் வண்டல்களை விரைந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், அங்கு கொட்டப்பட்டிருந்த கட்டடக் கழிவுகளை உடனே அகற்றும்படியும் உத்தரவிட்டாா்.

மரக்கிளை அகற்றம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை மாநகராட்சி அலுவலா்கள் தொடா்ந்து அகற்றி வருகின்றனா்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 49,956 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களில் 2,708 மரங்களின் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலோஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வட்டாரத்திற்கு தலா 3 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் என 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் 2 ஹைட்ராலிக் ஏணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com