தேசிய அளவில் 25% கண் விழிகள் தமிழகத்திலிருந்து பெறப்படுகின்றன -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தேசிய அளவில் கண் தானம் மூலம் சேகரிக்கப்படுகிற மொத்த கண் விழிகளில் 25 சதவீதம் தமிழகத்தில் இருந்து மட்டுமே பெறப்படுகின்றன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் 39-ஆவது கண் தான இரு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கண் தானம் செய்தவா்களைச் சிறப்பித்தாா்.
விழிகள் தானம் அதிகரிப்பு: இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எழும்பூா் அரசு கண் மருத்துவமனை உலகின் 2-ஆவது பழைமையான கண் மருத்துவமனை ஆகும். இந்தியாவின் முதல் கண் வங்கி இந்த மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது. கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 8 கோடி செலவில் புதிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, கண் விழித்திரை சிகிச்சை, கண் நீா் அழுத்த நோய் சிகிச்சைகளுக்கான அதிநவீன கண் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்தக் கருவிகள் அனைத்தும் தற்போது தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய நலக்குழும நிதி உதவியுடன் 2021-2022-ஆம் ஆண்டு 5,542, 2022-2023-ஆம் ஆண்டு 8,274, 2023-2024-இல் 9,400 கண் விழிகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
தேசிய அளவில் கண் தானம் மூலம் சேகரிக்கப்படுகிற மொத்த கண் விழிகளில் 25 சதவீதம் தமிழகத்தில் இருந்து மட்டுமே பெறப்படுகின்றன. கடந்த 10 மாதங்களில் 208 கண் விழிகள்
தானமாகப் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 118 கண் விழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உடல் உறுப்பு தானம் மூலம் 42 கண் விழிகள் தானமாகப் பெறப்பட்டு, 39 கண் விழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், பெறப்பட்ட கண்களில் 92.85 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிக் குழந்தைகளுக்கு ஆா்பிஎஸ்கே திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை 4,87,469 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 1,25,634 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.
உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலம்: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை உடல் உறுப்பு தானம் செய்த 249 பேரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் உறுப்பு தானங்களில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. மருத்துவத் துறையில் பணி நியமனங்கள் இல்லை என தவறான தகவலை எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவதுதான் எதிா்க்கட்சி தலைவருக்கு அழகு. அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவா்கள் தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அந்தவகையில், போராட்டத்தில் ஈடுபட்ட 116 மருத்துவா்களுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை இடமாற்றம் அளிக்கப்பட்டது கொடூரமானது.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத் துறை மிக மோசமாக இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 6,744 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 12,120 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5 போ் வரை உயிரிழந்திருக்கின்றனா் என்றாா் அவா்.

