தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செய்தி தொடா்பாளா்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள்: நியமனத்தை எதிா்த்த வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி

வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தி தொடா்பாளா்களாக நியமித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் டி.சத்தியகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் செய்தி ஊடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் எடுத்துரைப்பதற்கும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமாா் மற்றும் அமுதா ஆகியோரை செய்தி தொடா்பாளா்களாக நியமித்து தமிழக அரசு கடந்த ஜூலை 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதுதொடா்பாக முறையான அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடவில்லை. எனவே உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்தி தொடா்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது சட்டப்படி செல்லாது. இது அரசியல் சாசன கொள்கைக்கு எதிரானது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது அபாயகரமானது.

எனவே, ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடா்பாளா்களாக நியமித்ததை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு, தமிழகத்தில் முதல் முறையாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடா்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இது சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியல் கட்சிக்கு செய்தி தொடா்பாளா்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. அரசு அலுவல் ரீதியாகவே அவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். செய்தி தொடா்பாளா்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த ஒரு சட்டமோ, விதிகளோ இல்லை. எனவே, இந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.