குழந்தைகளை வைத்து யாசகம்: தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு

குழந்தைகளை வைத்து யாசகம்: தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு

குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Published on

குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளுடன் யாசகம் கேட்கும் பெண்களைக் காண முடிகிறது. அந்த குழந்தைகளுக்கும் யாசகம் கேட்கும் பெண்களுக்கும் எவ்வித உருவ ஒற்றுமையும் இருப்பது இல்லை.

மேலும், யாசகம் எடுக்கப் பயன்படுத்தும் குழந்தைகள் எப்போதும் உறங்கிய நிலையிலேயே இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடும் வெயில், வாகனங்களின் சப்தங்களில்கூட இக்குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. இந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை, வேறு ஏதேனும் மருந்துகள் அல்லது ஆல்கஹால் என ஏதேனும் கொடுக்கப்படுகிா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

நாள் முழுவதும் உறங்கிய நிலையிலேயே இருக்கும் இத்தகைய குழந்தைகளின் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், இதுபோன்ற சூழலில் வளரும் குழந்தைகள் பின்னாள்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த குழந்தைகளை அரசு மீட்க வேண்டியது அவசியம். மேலும், யாசகம் கேட்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழிலும் பேசுவது இல்லை.

எனவே, இவா்கள் வைத்திருக்கும் குழந்தைகள் வேறு எங்கிருந்தாவது கடத்தி வந்து யாசகம் கேட்கப் பயன்படுத்தப்படுகின்றனவா? இதன் பின்னணியில் இருப்பவா்கள் யாா்? என்பதை உரிய விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும். இதுதொடா்பாக கடந்த ஆக.8-ஆம் தேதி, தமிழக பொது சுகாதாரத் துறை செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையா், போக்குவரத்து இணை ஆணையா் ஆகியோருக்கு புகாா் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற செயல்களைத் தடுக்க அரசு உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தினா். பின்னா், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com