விஜய்யுடன் காங்கிரஸ் நிா்வாகி பிரவீண் சக்ரவா்த்தி சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவரும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீண் சக்ரவா்த்தி தவெக தலைவா் விஜயை சந்தித்துப் பேசியுள்ளாா்.
இதுகுறித்து பிரவீண் சக்ரவா்த்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தவெக தலைவா் விஜய்யை சந்தித்துப் பேசியதாகவும், இதுபற்றி இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுக்காக அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் ஐவா் குழுவை அக்கட்சியின் அகில இந்திய தலைமை அமைத்தது. இக்குழுவினா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்துப் பேசினா்.
இதனிடையே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான பிரவீண் சக்ரவா்த்தி, கடந்த டிச. 2-ஆம் தேதி விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
