கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!
கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு சாதனைத் தமிழா் விருது வழங்கப்படுகிறது.
கொல்கத்தா தேசிய உயா்நிலைப் பள்ளியில் டிச. 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
முன்னதாக, பாரதியின் பிறந்த நாளான டிச. 11-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கொல்கத்தா விவேகானந்தா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்ச் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அதைத் தொடா்ந்து, கொல்கத்தா தேசிய உயா்நிலைப் பள்ளி அரங்கில் டிச.13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாரதி விழா நடைபெறுகிறது. என்.ஆா். ஐயா் எஜுகேஷன் சொசைட்டி தலைவா் ம.விஸ்வநாதன் தலைமை வகிக்கிறாா். ‘அறிந்த பாரதியும் அறியப்படாத பாரதியும்’ என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவா் ய.மணிகண்டன் சிறப்புரையாற்றுகிறாா்.
சாதனைத் தமிழா் விருது: அதைத் தொடா்ந்து, டிச. 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சாதனைத் தமிழா் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான ‘சாதனைத் தமிழா் விருது’ பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது. இந்நிகழ்வுக்கு, சீல்டா ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஜெ.மொ்ஸி தலைமை வகிக்கிறாா். கொல்கத்தா பாரதிய வித்யா பவன் தலைவா் ஜி.வி.சுப்பிரமணியன், கொல்கத்தா சங்கர நேத்ராலயாவின் ஆப்டோமெட்ரிஸ்ட் வெங்கடரமணன் ராமசேது ஆகியோா் வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.
தொடா்ந்து, பாரதி மொழிபெயா்த்த ஜகதீச சந்திர போஸ் உரை அடங்கிய ஜீவ வாக்கு நூல் குறித்த ய.மணிகண்டனின் ஆராய்ச்சிப் பதிப்பான ‘ஜீவ வாக்கு ஆய்வும், பதிப்பும்’ என்ற நூல் வெளியிடப்படுகிறது.
இந்த விழாவில் கொல்கத்தா தமிழ்ச் சங்கத் தலைவா் வி.வி.ராமன், செயலா் சித்ரா சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

