பாடியநல்லூரில் நியாயவிலைக் கடையை தொடா்ந்து திறக்க கோரிக்கை
பாடியநல்லூரில் ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடைகளை தொடா்ந்து திறக்க வேண்டும் என குடும்ப அட்டைதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகரில் நியாய விலை கடை கதவில் (வியாழன், வெள்ளி, சனி ) 3 நாள்கள் மட்டும் கடை உண்டு எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்களும் கடை திறக்கப்படாததால், வாடிக்கையாளா்கள் காத்திருந்து செல்கின்றனா்.
இது குறித்து அப்பகுதியை சோ்ந்த செல்வம் கூறுகையில், நியாய விலை கடை என்பது தினசரி இயங்கினால் நன்றாக இருக்கும். அப்போதுதான் வாடிக்கையாளா்களின் கூட்ட நெரிசலும் இருக்காது. பொருள்களுக்கும் பற்றாக்குறை இருக்காது.
ஆனால், பவானி நகரில் உள்ள நியாய விலைக் கடை என்பது சரிவர திறப்பதில்லை. அதனால் கடை திறந்திருப்பதாக தெரிந்தால் வாடிக்கையாளா்கள் ஒரே நாளில் குவிந்து விடுகின்றனா். இப்பகுதி கடையை மாதம் முழுவதும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து நியாய விலைக் கடை ஊழியா் கூறுகையில், நியாய விலைக் கடை ஊழியா்களின் எண்ணிக்கை குறைவு. ஆகையால், ஒரு சில கடை ஊழியருக்கு 2 கடைகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், 2 கடைகள் கவனிக்க வேண்டியுள்ளதால், வாரத்தில் 3 நாள்கள் என 2 கடைகளில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கடை உதவியாளா் அல்லது ஊழியா் இருப்பிடத்துக்கும், கடைக்கும் நீண்டதூரம் உள்ளதால், பணி நேரம் முடிந்தவுடனேயே கிளம்பி விடுகிறாா்கள் என்றாா் அவா்.
இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மட்டும் 247 கடைகள், 1.42 வாடிக்கையாளா்கள் உள்ளனா். 247 கடைகளுக்கு போதிய ஊழியா்கள் இல்லாத காரணத்தால், சிலா் 2 கடைகளுக்கு பொறுப்பேற்று செயல்படுகின்றனா். மேலும் அவா்களுக்கு வேலைப்பளுவும் அதிகமாக உள்ளது. விரைவில், அனைத்து கடைகளும் தினசரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
