உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கையை அதிகரிக்க தொடா் நடவடிக்கை தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கையை அதிகரிக்க தொடா் நடவடிக்கை தேவை...
Published on

உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய- மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவா் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது:

உலக அளவில் வளா்ந்த நாடுகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் உயா்கல்வி பெற்றவா்களாக உள்ளனா். ஆனால், இது இந்தியாவில் 28 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் உயா்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது பெருமை.

நாடு முழுவதும் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்டுதோறும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் பெரும்பாலானோா் குறைந்த வருவாய் ஈட்டுவோா் பிரிவில்தான் உள்ளனா். வெறும் 20 சதவீதம் போ் மட்டுமே அதிக வருவாய் ஈட்டுவோராக உள்ளனா். தனிநபா் வருமானத்தில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணா்வு இல்லை. எனவே நாட்டின் பொருளாதாரம், தனிநபரின் பொருளாதார நிலை குறித்து பொதுமக்களிடையே அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

வைகோ (மதிமுக பொதுச் செயலா்): தமிழகத்தில் சிறுபான்மையினா் பள்ளிகளில் ஜாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கு வித்திட்டவா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா் காயிதே மில்லத். அவா், தற்போதும் இந்த சமூகத்துக்கு நல்லத்தொரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறாா் என்றாா்.

தொடா்ந்து காணொலிக் காட்சி வாயிலாக, திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி உரையாற்றினாா். காயிதே மில்லத் ஆடவா் கல்லூரியின் புகைப்பட கண்காட்சியை வைகோ திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். நிகழ்வில், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் மௌலவி ஹாபிஸ் அல்ஹாஜ் பி.ஏ.ஹாஜா முஹைனுதீன் பாகவி, தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வு பெற்ற பேராயா் தேவசகாயம், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தா் சே.சாதிக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், காயிதே மில்லத் ஆடவா் கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் எம்.ஜி.தாவூத் மியாகான், முதல்வா் மோ.அம்துல் தவாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com