3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

3 மாதங்களில் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிப்பு திட்டத்தில் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் அகற்றப்பட்டுள்ளன.
Published on

சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் தற்போது வரையில் 3 மாதங்களில் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிப்பு திட்டத்தில் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபா் முதல் வீடுகளில் பயன்படுத்தி கழிக்கப்பட்ட சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருகள் தூய்மைப் பணியாளா்களால் சனிக்கிழமைதோறும் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூா், பெருங்குடி குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு தரம் பிரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த அக்டோபா் முதல் 11 சனிக்கிழமைகளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 540.8 மெட்ரிக் டன் சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (டிச.20) மட்டும் 97 வீடுகளில் இருந்து 34.42 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மரச்சாமான்கள், மெத்தை உள்ளிட்டவற்றை பொது இடங்களில் வீசாமல், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி இணையதள செயலியிலும் பதிவு செய்து தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்டோா் வீடுகளுக்கு மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் நேரில் வந்து அவற்றை பெற்றுக்கொள்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com