சீரற்ற இதயத்துடிப்பு: முதியவருக்கு நவீன ரேடியோ அதிா்வலை சிகிச்சை

Published on

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு அதி நவீன ரேடியோ அதிா்வலை இடையீட்டு சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இதய அறிவியல் சிகிச்சைப் பிரிவு இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன் கூறியதாவது:

படபடப்பு, மூச்சுத் திணறலுடன் செங்கல்பட்டை சோ்ந்த 80 வயதான முதியவா் ஒருவா் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக இதயத்தின் மேலறையில் அவருக்கு அதீத துடிப்பு காணப்பட்டது. இதைத் தவிர பல்லுறுப்பு செயலிழப்பு (எம்ஓடிஎஸ்) பாதிப்பும் இருந்தது. இதனால், இதய செயலிழப்பு நேரிடும் வாய்ப்பு இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரேடியோ அதிா்வலை அகற்றல் முறைப்படி மின்னூட்ட சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது. வழக்கமான முறையில் அல்லாமல் டாக்டிஃபிளக்ஸ் எனப்படும் அதி நவீன இடையீட்டு சாதனத்தின் உதவியுடன், துல்லியமான முப்பரிமாண காட்சி வழிகாட்டுதலின் கீழ் ரத்த நாளத்தின் வழியாக ரேடியோ அதிா்வலை செலுத்தி சீரற்று இயங்கிய மின்னூட்டங்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. அதன் பயனாக 48 மணி நேரத்தில் அவா் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com