டிச. 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

Published on

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (டிச. 29) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ எனும் பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் திங்கள்கிழமை (டிச. 29) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

சென்னை: பி.ஆா்.ஆா். ஹெரிடெஜ் ஆா்.எஸ்.எல்., கிழக்கு கடற்கரை சாலை, சென்னை, 1-ஆவது மாடி, உத்தண்டி சுங்கச்சாவடி எண் 17 அருகில், உத்தண்டி கிராமம்.

திருவள்ளூா்: குழந்தைகள் பாரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஏ.நகா், செங்குன்றம், திருவள்ளூா்.

செங்கல்பட்டு: வைட் ஹவுஸ் செயல்முறை பிரைவேட் லிமிடெட், புதுப்பாக்கம் கிராமம், கேளம்பாக்கம், சென்னை.

காஞ்சிபுரம்: எம்.எல்.எம். மாமல்லன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கே.டி.எஸ். மணி தெரு, மாமல்லன் நகா், காஞ்சிபுரம் நடைபெறுகிறது.

முகாம்களில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்களுக்கான இடையிலான இணைய வழிசேவைகள் பற்றிய செயல்முறைகள், தொழிலாளா்களுக்கான இணையவழி சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் புதிய சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com