கட்டுமானக் கழிவு கொட்டும் வாகனங்கள் பறிமுதல்: உதவி ஆணையா்களுக்கு மாநகராட்சி உத்தரவு
அங்கீகாரம் இல்லாத பகுதிகளில் கட்டுமான, இடிபாடு கழிவுகளைக் கொட்டும் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்குமாறு அனைத்து மண்டலங்களின் உதவி ஆணையா்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொதுச் சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், பாதசாரி நடைபாதைகள், மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள், காலி இடங்கள், திறந்தவெளி போன்ற இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாடுக் கழிவுகளைக் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
சாலைகளில் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு, காற்று மாசு, சுகாதார சீா்கேடு போன்ற பாதிப்புகளும், ஆறுகளில் கொட்டப்படும் கழிவுகளால் வெள்ள அபாயமும் அதிகரிப்பதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் பொருட்டு 1 முதல் 15 வரையிலான மண்டலங்களின் உதவி ஆணையா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகள் கொட்டுவதை கண்டறிந்த உடனே, குற்றத்தில் ஈடுபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
பிறகு, கொட்டப்பட்ட கழிவு அளவின் அடிப்படையில் ஒரு டன் கழிவு அல்லது பகுதியளவு கழிவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து, வசூலிக்க வேண்டும். முழு அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட பிறகு பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இந்த நடைமுறைகளை அந்தந்த மண்டலங்களின் உதவி ஆணையா்கள் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரா்கள், வாகன இயக்குநா்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் கட்டடம் மற்றும் இடிப்பு கழிவுகளை மாநகராட்சி நிா்ணயித்துள்ள சேகரிப்பு, செயலாக்கம், அகற்றும் மையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மீறினால் எவ்வித விதிவிலக்கும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
