அரசு ஐடிஐ-இல் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை ஆா்.கே.நகரில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆா்.கே.நகா் அரசு ஐடிஐ-இல் மின்சாரப் பணியாளா் (எலக்ட்ரீஷியன்), பொருத்துநா் (பிட்டா்), கம்மியா் மோட்டாா் வாகனம் (மெக்கானிக் மோட்டாா் வைக்கில்), பற்றவைப்பவா் (வெல்டா்), கம்பியாள் (வயா்மேன்) ஆகிய தொழிற்பிரிவுகளில் கடந்த ஜூன் 19 முதல் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் 8 மற்றும் 10- ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், இலவச மிதிவண்டி, அடையாள அட்டை, சீருடை, காலணிகள், பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும். பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. கூடுதல் விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆா்.கே.நகா், நெ.55 கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வடசென்னை-600 021 என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.
தொடா்பு எண்கள்: 044-25911187, 9962452989, 9952673464 எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

