மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது
மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா். விஷ்ணுகுமாரின் மனைவி அஸ்மிதா, அழகு கலைப் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணுகுமாரும், அஸ்மிதாவும் பிரிந்து வாழ்கின்றனா்.
இந்நிலையில் அஸ்மிதா, மதுரவாயல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், விஷ்ணுகுமாா் என்னை ஏமாற்றி திருமணம் செய்தாா். அவருக்கு பல பெண்களுடன் முறையற்ற உறவு உள்ளது. எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்துடன், என்னை மிரட்டியும், தாக்கியும் வருகிறாா்.
எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கிறாா். எனவே, விஷ்ணுகுமாா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப் புகாா் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் விஷ்ணுகுமாா் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், விஷ்ணுகுமாா் மீது நம்பிக்கை மோசடி, தாக்குதல் நடத்துதல், மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த விஷ்ணுகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.

