உதவித்தொகையுடன் இதழியல் பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடக்கம்
அரசு நடத்தும் இதழியல் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் உண்டு உறைவிட இதழியல் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (நவ. 10) முதல் தொடங்கவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களுக்கு, சென்னை இதழியல் கல்வி நிறுவனம், சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி ஆகியன இணைந்து இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ‘ஒரு வார உண்டு உறைவிடப் பயிற்சி பட்டறையை கோட்டூா்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் நவ. 10 முதல் 18-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடத்துகின்றன.
இந்தப் பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினா் சமூகங்களைச் சோ்ந்த பட்டதாரிகள் பங்கேற்று பயிற்சி பெற இருக்கிறாா்கள்.
அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செய்தி உருவாக்கும் நடைமுறை பயிற்சிகள் மற்றும் செய்முறை வகுப்புகள் பங்கேற்பாளா்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பாக, விடியோ எடிட்டிங், பாட்காஸ்டிங், செய்தித் தொகுப்பு, தரவு இதழியல் தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவை பங்கேற்பாளா்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சியை நிறைவு செய்யும் 26 பங்கேற்பாளா்களில் இருந்து 15 பங்கேற்பாளா்களுக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்கள் ரூ.20,000 ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
