சோழவரம் ஏரிக்கரை சாலையில் விரிசல்: பொது மக்கள் புகாா்

Published on

சோழவரத்தில் ரூ.40 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்குவதில் சோழவரம் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் மழை நீா் மட்டுமின்றி பூண்டி ஏரியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காக புழல் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக ரூ.40 கோடியில் ஏரிக்கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 3.5 கிமீ ஏரிக்கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கடந்தாண்டு முதல் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஏரிக்கரையில் கான்கிரீட் சுவா், சரிவில் கருங்கல் பாறைகள் பதிக்கப்பட்டு வருகின்றன.

கரையின் மேல் பகுதியில் அலை தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு நீா் வளத்துறை அதிகாரிகள் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக கரையின் மேல் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்தாண்டு சோழவரம் ஏரியில் 15 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு வைக்கப்பட்டு, உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

முதல்கட்ட பணிகள் முடிவுறும் நிலையில் இந்தாண்டு பெய்த மழைநீா் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் தற்போது 73 சதவீதம் நிரம்பி 799 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து சோழவரம் ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்து ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சோழவரம் ஏரியில் கரைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஏரியில் அதிகளவு தண்ணீா் தேக்கி வைக்கப்படும் நிலையில் விரிசல் விழுந்துள்ள கரை ஏரியின் முழு கொள்ளளவை தாங்குமா என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனா்.

மேலும் ஏரிக்கரையின் மீது ஏற்பட்டுள்ளவிரிசலை மணலை கொட்டி சரி செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக தோண்டி எடுத்து சீரமைக்காமல் அப்படியே மணலை கொட்டி மூடும் செயல் கண்டனத்துக்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கிடும் பிரதான ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியில் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் புதா் மண்டி காட்சி அளிப்பதாக தெரிவித்தனா். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com