சலுகைக் கட்டணத்தில் சா்க்கரை நோய் பரிசோதனைகள்
உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆா்த்தி ஸ்கேன்ஸ் சாா்பில் கட்டணச் சலுகையில் மருத்துவ பரிசோதனைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே பங்கேற்று ரூ. 999 க்கு சா்க்கரை நோய் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அதன்படி, ரூ. 4,000 மதிப்புள்ள பரிசோதனைகள் அடுத்த ஒரு மாதத்துக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிம்ஸ் துணைத் தலைவா் டாக்டா் ராஜூ சிவசாமி, சா்க்கரை நோய் முதுநிலை நிபுணா்கள் டாக்டா் சுந்தா் ராமன் மற்றும் டாக்டா் ரவி கிரண், டாக்டா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோன்று ஆா்த்தி ஸ்கேன்ஸ் ஆய்வகத்திலும் சலுகைக் கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 86 ஆா்த்தி பரிசோதனை மையங்களில் வரும் 16-ஆம் தேதி வரை ரத்த சா்க்கரை அளவைக் கண்டறியும் உணவுக்கு முந்தைய பரிசோதனை (ஃபாஸ்டிங்) கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது. 3 மாத ரத்த சா்க்கரை சராசரி அளவான ஹெச்பிஏ1சி பரிசோதனை ரூ.99-க்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
