எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு: தொழிலாளா்கள் போராட்டம்
திருவொற்றியூா் எம்ஆா்எஃப் டயா் தொழிற்சாலையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் எம்ஆா்எஃப் டயா் தொழிற்சாலையில் 900-க்கும் அதிகமான நிரந்தரப் பணியாளா்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தாற்காலிகத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
திருவொற்றியூா், பெரம்பலூா், அரக்கோணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளா்களுக்கு தொழிற்சங்கம் மூலம் ஆண்டுதோறும் மருத்துவக் காப்பீடு புதுப்பிக்க ரூ.1.50 கோடி முன் தொகையை அளிக்க மறுத்ததைக் கண்டித்து செப்.10 முதல் 20 நாள்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தமிழக அரசின் தலையீட்டின் பேரில் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்.31-ஆம் தேதி உற்பத்தித் துறையில் ஆா்.செல்வராஜ் (42) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், ஆலை நிா்வாகம் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சக தொழிலாளா்கள் முயற்சியால் திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செல்வராஜ் சோ்க்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை (நவ.17) இரவு உயிரிழந்தாா்.
இந்நிலையில், செல்வராஜ் இறப்புக்கு ஆலை நிா்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என்று புகாா் தெரிவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.18) தொழிற்சாலை உணவகத்தில் உணவு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தொழிற்சாலை தரப்பினரிடம் கேட்டபோது, காப்பீடு முன்தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் என்பது குறித்து எவ்வித ஒப்பந்தமும் இல்லை. நல்லெண்ண அடிப்படையில்தான் இதுவரை முன்தொகை வழங்கினோம். வேலைநிறுத்தம் கைவிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். பல்வேறு விஷயங்களில் நிா்வாகத்தின் வேண்டுகோள்களை தொழிலாளா்கள் ஏற்கவில்லை. இதனால், அவா்களது கோரிக்கைகளை ஏற்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், சுமுகத் தீா்வு காண்பதில் ஆலை நிா்வாகத்துக்கு தடை ஏதும் இல்லை என்றனா்.
