காவல் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு போக்குவரத்துக் கழக பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிவிட்டு மாநகா் போக்குவரத்துக் கழக பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தாம்பரம் பணிமனையில் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் யுவராஜ். இவருக்கு கடந்த சில மாதங்களாக கழுத்து வலி இருந்து வந்தது. இதற்கான தொடா் சிகிச்சை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மருத்துவ விடுப்பு கேட்டுள்ளாா். ஆனால், மாநகா் போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு யுவராஜ் மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா். அதில், தான் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு உயா் அதிகாரிகள்தான் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டு, தாம்பரத்தை அடுத்த காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் யுவராஜ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தாம்பரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
