சென்னையில் 215 நிவாரண மையங்கள்! ஒரு லட்சம் பால் பவுடா், உணவுப் பொருள்கள் தொகுப்பு தயாா்!
சென்னை மாநகராட்சியில் முதியோா், குழந்தைகளுக்கு வழங்க ஏதுவாக 1 லட்சம் பால் பவுடா் பாக்கெட்டுகள் மற்றும் 1 லட்சம் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சாா்பில், டித்வா புயல் மழையை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
215 நிவாரண மையங்கள்: உணவு, குடிநீா், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய 215 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இந்த மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 110 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அடையாறு மண்டலம் வாா்டு- 172, சோழிங்கநல்லூா் மண்டலம் வாா்டு-192, 198, 199, 200 ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 32,500 பேருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் காலை உணவு வழங்கப்பட்டது.
திருவொற்றியூா் மண்டலம், வாா்டு-14, திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த மழைநீா் தண்ணீா் உறிஞ்சும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. நோய்த்தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் வகையில் 20 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
தயாா் நிலையில் படகுகள், பணியாளா்கள், வாகனங்கள்: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு, நிவாரண மையங்களில் தங்கவைக்க ஏதுவாக 103 படகுகள், தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சாா்ந்த 60 போ், மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 30 போ் தயாா் நிலையில் உள்ளனா்.
மழைநீரை வெளியேற்றும் பணியில் மோட்டாா் பம்புகள், டிராக்டா்களில் பொருத்தப்பட்ட பம்புகள் என பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் உள்ளன.
இதுதவிர, 2 மற்றும் 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டா்கள், பல்வகை பயன்பாட்டுக்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டா்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பா் சக்கா் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள் என மொத்தம் 478 வாகனங்கள்-இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன.
மாநகராட்சி அலுவலா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 22,000 போ் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சாலையில் விழும் மரங்களை அகற்றத் தேவையான 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மர அறுப்பான்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை சாலையில் விழுந்த 7 மரங்களின் கிளைகள் விரைந்து அறுத்து அகற்றப்பட்டன.
கட்டுப்பாட்டு மையம் திறப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தை 1913 என்ற உதவி எண் மூலம் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்களின் அழைப்புகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 150 இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
1 லட்சம் பால் பாக்கெட்டுகள், உணவுப் பொருள்கள்: முதியோா், குழந்தைகளுக்கு வழங்க ஏதுவாக 1 லட்சம் ஆவின் பால் பவுடா் பாக்கெட்டுகள் மற்றும் 1 லட்சம் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டா் பாமாயில் உள்ளது என்று சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

