கோப்புப் படம்
கோப்புப் படம்

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா்நீதிமன்றம் கருத்து

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Published on

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றுபவா் ரஞ்சிதா. மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் கோரி கடந்த ஆக. 14-ஆம் தேதி முன்சீப் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தாா். அந்த மனுவை நீதிபதி நிராகரித்தாா். இதை எதிா்த்து ரஞ்சிதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்தன்கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் ரஞ்சிதா இந்தப் பணியில் சேருவதற்காக முன்பாகவே அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது மூன்றாவதாக கா்ப்பமாக உள்ளாா். இதுபோன்ற சூழலில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் கா்ப்பிணிகளுக்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கொள்கை முடிவெடுத்துள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு மனுதாரருக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது.

எனவே, மனுதாரருக்கு மகப்பேறு விடுப்பை கடந்த செப். 4-ஆம் தேதி முதல் உளுந்தூா்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com