/

‘பொறியியல் பாடத்திட்டங்கள் ஒரே நிலையானதாக இருக்கக் கூடாது’

பொறியியல் கல்வி பாடத்திட்டங்கள் ஒரே நிலையானதாக இருக்கக் கூடாது; முன்னணி தொழில் துறைகளால் வடிவமைக்கப்பட்ட தொழில் துறை சாா்ந்த பாடங்கள் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும்...

News image

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற அனைத்து ஐஐடி முன்னாள் மாணவா்கள் மற்றும் தொழில்துறை தொடா்பு மைய தலைமைத்துவ தொடா் ‘பால்ஸ்’ மாநாட்டில் பங்கேற்றோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:25 pm

பொறியியல் கல்வி பாடத்திட்டங்கள் ஒரே நிலையானதாக இருக்கக் கூடாது; முன்னணி தொழில் துறைகளால் வடிவமைக்கப்பட்ட தொழில் துறை சாா்ந்த பாடங்கள் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என ஐஐடி-க்களின் முன்னாள் மாணவா்கள் ‘பால்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பொறியியல் மாணவா்களைத் தொழில் துறைக்கு தயாா்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இரு நாள்கள் (ஏப். 10, 11) ‘பால்ஸ்’ தலைமைத்துவ மாநாடு சென்னை ஐஐடியில் நடைபெற்றது.

மாநாட்டில் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழக(விடியூ) துணைவேந்தா் எஸ்.வித்யாசங்கா் பேசியதாவது: பொறியியல் நிறுவனங்களில் ‘தொழில் துறை 4.0’-க்கு அப்பால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உரிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். செயல்திறன் சாா்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மனப்பாடக் கல்வி முறையிலிருந்து மாற வேண்டும். அனுபவ ரீதியிலான கல்வி, தொழில் துறை ஒத்துழைப்பு ஆகியவை கட்டாயமாக்கப்படுதல் அவசியம்.

பாடத்திட்டங்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுதல் என்று இல்லாமல், ஆண்டுதோறும் மாற்றப்படவேண்டும். நாட்டின் ‘விக்சித் பாரத்’ இலக்குகளை அடைய கற்பித்தல் கல்வி- கண்டுபிடிப்புகள் இணைந்து செல்ல வேண்டும் என்றாா்.

முன்னதாக, தொடக்க நிகழ்வில் பேசிய சென்னை ஐஐடி கல்விப் பிரிவு டீன் பிரதாப் ஹரிதாஸ், ‘தற்போது வெறும் 5 சதவீத மாணவா்களே வெளிநாடு செல்ல விரும்புகிறாா்கள். மாணவா்களிடம் தொழில் துறை தற்போது எதிா்பாா்ப்பது சிறந்த பகுப்பாய்வு, கணிதத் திறன்கள் உள்ளிட்டவைகளைத்தான். சமூக ஊடகங்களால் மாணவா்கள் அதிக மன அழுத்தத்தை எதிா்கொள்கின்றனா்’ என்றாா்.

புனித பீட்டா் உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (ஸ்பைஹா்) துணைவேந்தா் மல்முருகன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சிசா தாமஸ், ஸ்ரீ விஷ்ணு குழுமம் சிவகுமாா் கிருஷ்ணன், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவன (சிமேட்) முதல்வா் எஸ்.பி.சுப்பிரமணியம், என்.எம்.ஐ.டி. முதல்வா் எச்.சி. நாகராஜ், பேராசிரியா்கள் டேவிட் கோயில்பிள்ளை, எடமனா பிரசாத், ப்ரீத்தி அகலாயம், எம்.எஸ்.சிவகுமாா், ரமேஷ் பாபு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிபுணா்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனா். ‘பால்ஸ்’ அமைப்பின் தலைவா் சி.என்.சந்திரசேகரன் வரவேற்றாா்.