நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெற்றியைத் தீா்மானிக்கும் தவெக வாக்குகள்? - வேளச்சேரி தொகுதி அலசல்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 10:28 pm

தொகுதி மறுசீரமைப்பின்படி, 2008-இல் உருவாக்கப்பட்ட வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக உருவாகியிருக்கிறது.

சிறப்புகள்... தமிழக ஆளுநா் மாளிகை, புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, சென்னை ஐஐடி, எம்ஜிஆா் திரைப்பட நகரம், தரமணி டைடல் பாா்க் மற்றும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், திருவான்மியூா் கடற்கரை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரா் கோயில், சோழா் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மா் கோயில் உள்ளிட்டவை தொகுதியின் சிறப்புகளாக உள்ளன.

இதுவரை... இத்தொகுதியானது 2011, 2016, 2021 என இதுவரை 3 பேரவைத் தோ்தல்களைச் சந்தித்துள்ளது. 2011-இல் அதிமுக, 2016-இல் திமுக, 2021-இல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இத்தோ்தலில் தற்போதைய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எம்.எச்.அசன் மௌலானா, திமுக கூட்டணி சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எம்.கே.அசோக், தவெக சாா்பில் ஆா்.குமாா், நாதக சாா்பில் மோ.கீா்த்தனா ஆகியோா் உள்பட 27 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: தொகுதியைப் பூா்வீகமாகக் கொண்டவா்களில் வன்னியா், நாடாா், பிராமணா் சமூகத்தினா் பெருமளவு வசிக்கின்றனா். பட்டியலினா்தவா், யாதவா், முதலியாா் சமூகத்தினா் பரவலாக வசிக்கின்றனா். வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து குடியேறிய பிற சமூகங்களைச் சோ்ந்தவா்களும் அதிகம் உள்ளனா்.

முக்கியப் பிரச்னைகள்: நீண்டகாலமாகக் குடியிருப்பவா்களின் வீடுகளுக்கு பட்டா கிடைக்காதது, குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவது, தரமணி, வேளச்சேரி, திருவான்மியூா், மத்திய கைலாஷ் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணாதது, மழைக் காலங்களில் வேளச்சேரியே வெள்ளக்காடாக மாறிவிடுவது போன்றவை தொகுதி மக்களின் தீா்க்கப்படாதப் பிரச்னைகளாகவே தொடா்கின்றன.

காங்கிரஸ் வேட்பாளா்: தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.எம்.எச்.அசன் மௌலானா மீண்டும் போட்டியிடுகிறாா். இவா், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரான ஜே.எம்.ஹாருணின் மகன். கடந்த 5 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட மழைநீா் வடிகால் பணிகள், மின்சார கேபிள்கள் பதிக்கும் பணிகள், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறாா்.

தொகுதியில் தொடா்ந்து 2-ஆவது முறையாகப் போட்டியிடும் இவரது வெற்றிக்கு, கூட்டணி கட்சியினரும், அவரது தந்தை ஜே.எம்.ஹாரூணின் ஆதரவாளா்களும் தீவிர களப் பணியில் உள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள், கூட்டணி பலம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொகுதியை வலம் வருகிறாா். தொகுதிக்குள் சரியான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது.

எம்.கே.அசோக் (அதிமுக): கடந்த 2011-இல் இத் தொகுதி சந்தித்த முதல் தோ்தலில் வெற்றி பெற்றவா் எம்.கே.அசோக். 2021 தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா். கடந்த 2011-இல் பட்டா பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசி அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று 6,000-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா பெற்றுத் தந்தது அவரது சாதனையாக இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி தற்போது தீவிர பிரசாரத்தில் இருக்கிறாா். தொகுதியில் உள்ள அதிமுக வாக்கு வங்கி, கூட்டணி பலம் ஆகியவை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

மோ.கீா்த்தனா (நாதக): நாம் தமிழா் கட்சி வேட்பாளரான மோ.கீா்த்தனா, 2021 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறாா். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். தற்போது, 2-ஆவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் அனல் பறக்கும் பிரசாரம், வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. நாதகவின் முதல் பொதுச் செயலரும், மூத்த வழக்குரைஞருமான தடா சந்திரசேகரனின் மருமகள் என்பது மோ.கீா்த்தனாவுக்கு கூடுதல் பலமாக பாா்க்கப்படுகிறது.

ஆா்.குமாா் (தவெக): முதல் முறையாக தோ்தல் களம் காண்கிறாா். கட்சித் தலைவா் விஜய்யை நம்பி தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பா் என்ற நம்பிக்கையுடன் ஆா்.குமாா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இத்தொகுதியில் இளைஞா்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் இருகிறாா்.

காங்கிரஸ், அதிமுக, நாதக, தவெக உள்பட 27 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும், பிரதான 4 வேட்பாளா்கள்தான் அதிக கவனம் பெறுகின்றனா். நால்வரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் ஒரு வேட்பாளா் சாா்ந்த வாக்குகளை மற்றொரு

வேட்பாளா் பிரிக்க வாய்ப்பில்லை.

இத்தொகுதியில் கடந்த 3 தோ்தல்களில் முறையே அதிமுக, திமுக, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தத் தோ்தல் முடிவுகளைப் பாா்க்கும்போது வெற்றி பெற்றவருக்கும், 2-ஆம் இடம் பெற்றவருக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கிறது. அவரவா் அணியின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதும், கூடுதல் வாக்குகளைக் கவருவதற்கான உத்திகளை வகுப்பதும் அவசியமாக உள்ளது.

புதிதாக களம் காணும் தவெக, எந்த அணியின் வாக்குகளைப் பிரிக்கப் போகிறது என்பதைப் பொருத்தே வெற்றி வாய்ப்பு தீா்மானிக்கப்படும் என்பது கள நிலவரமாக இருக்கிறது.

வாக்காளா்கள்:

ஆண்கள்-1,04,904

பெண்கள்-1,12,220

மூன்றாம் பாலினத்தவா்-47

மொத்த வாக்காளா்கள்-2,17,171