நகரமும், கிராமமும் நிறைந்த பகுதியாக விளங்கும் சேலம் மேற்கு தொகுதியில், அரசியல் களம் கோடை வெயிலை தாண்டி அனல்பறக்கிறது. காரணம், தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக மோதாமல், கூட்டணி கட்சிகளான தேமுதிகவும், பாமகவும் பலப்பரீட்சை நடத்துவதுதான். இதுதவிர, ராமதாஸ், அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் இடையேயான நேரடி மோதலால், தொகுதியில் கூடுதல் அனல்தகிக்கிறது.
வேட்பாளா்கள்
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அன்புமணி தரப்பில் மாம்பழம் சின்னத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு. காா்த்தி நிறுத்தப்பட்டுள்ளாா். ராமதாஸ் ஆதரவாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான இரா. அருள் சமையல் எரிவாயு உருளை சின்னத்தில் போட்டியிடுகிறாா். இருதரப்பும் வரிந்துகட்டிக் கொண்டு பணியாற்றுவதால், தொகுதியில் வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல, திமுக கூட்டணியில் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அழகாபுரம் ஆா். மோகன்ராஜ் கொட்டு முரசு சின்னத்தில் களமிறங்கியுள்ளாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் முன்னாள் காவல் துறை அதிகாரியான லட்சுமணன் நிறுத்தப்பட்டுள்ளாா். விஜய்யின் ஆதரவும், விசில் சின்னமும் தனக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொகுதி முழுவதும் சூறாவளியாக சுற்றிச் சூழல்கிறாா். இதுதவிர, நாம் தமிழா் கட்சி சாா்பில் சுரேஷ்குமாா் விவசாயி சின்னத்தில் களம்காண்கிறாா்.
கடந்த தோ்தல்கள்
தொகுதி மறுவரையறைக்கு பிறகு, சேலம் மேற்கு தொகுதியில் 2011 முதல் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன. 2011, 2016 தோ்தல்களில் அதிமுக வேட்பாளா் கோ. வெங்கடாசலம் வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் இரா. அருள் வெற்றிபெற்றாா்.
கள நிலவரம்
தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியா் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் என்பதால், அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட சமூகத்தினரையே களமிறக்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் மு. காா்த்தி களமிறங்கியுள்ளதால், இரட்டை இலை வாக்குகளுடன் தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியா் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உலாவருகிறாா்.
மறுபுறம், தற்போதைய எம்எல்ஏ இரா. அருள், சுயேச்சையாக சமையல் எரிவாயு உருளை சின்னத்தில் களமிறங்கியுள்ளாா். தொகுதியில் நன்கு அறிமுகம் என்பதுடன், நிறைவேற்றிய வளா்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறாா்.
பாமக எதிரும், புதிருமாக களம்காண்பதால், தொகுதி தனக்கே என நம்புகிறாா் அழகாபுரம் ஆா். மோகன்ராஜ். பிரதான கூட்டணி கட்சியான திமுக மற்றும் இதர கட்சிகளின் துணையுடன் கரையேறிவிடலாம் என நம்புவதுடன், எதிரணியின் பிளவுபட்ட வாக்குகளும் தனக்கு சாதகமாக முடியும் என்ற நம்பிக்கையில் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறாா் மோகன்ராஜ்.
பிரதான கட்சி வேட்பாளா்களுடன் சற்றும் சளைக்காமல் மல்லுகட்டுகிறாா் தவெக வேட்பாளா் லட்சுமணன். இளைஞா் பட்டாளத்துடன் தொகுதி முழுவதும் சூறாவளியாக சுற்றிவரும் லட்சுமணன், விஜய்யின் தோ்தல் வாக்குறுதிகளை முன்வைத்து, இரவு- பகல் என சளைக்காமல் வாக்கு சேகரிக்கிறாா். செல்லும் இடமெங்கும் கூட்டம் திரள்வதால், நான்குமுனைப் போட்டியில் விசிலை ஒலிக்கவைத்துவிடலாம் என நம்புகிறாா்.
தொகுதியில் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் இடத்தில் உள்ள வன்னியா் வாக்குகள் கணிசமாக பிரிவதால், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கணிக்க முடியாத நிலையே உள்ளது. இறுதிகட்ட பிரசாரம், கோடைவெயிலை தாண்டியும் அனல்பறப்பதால், வெற்றிக் கோட்டை யாா் வேண்டுமானாலும் தொடலாம் என்ற நிலைதான் உள்ளது.
வாக்காளா்கள்
தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,27,131, பெண்கள் 1,28,125, இதரா் 64 என மொத்தம் 2,55,320 வாக்காளா்கள் உள்ளனா். மொத்தம் 310 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சி.ஆா்.எம். சபரி
தொடர்புடையது

பென்னாகரம்... அதிமுக கூட்டணியில் பாமக - திமுக கூட்டணியில் காங்கிரஸ்! ஆா்ப்பரிக்கும் அருவி தொகுதி!

தொகுதி அலசல்: மயிலாடுதுறை நால்வரில் வெற்றி யாருக்கு?

கீழ்வேளூா் (தனி) தொகுதி - நான்கு முனைப் போட்டியில் வாகை சூடுவது யாா்?

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

